தமிழகத்தின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்ட இரு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மிகப்பெரிய நகரங்களான கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் சரிபங்கு முதலீட்டில் செயல்படுத்த, திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதை நிராகரித்து அதற்கான காரணங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு, கடந்த 2017-ம் ஆண்டு வகுக்கப்பட்ட மெட்ரோ ரயில் கொள்கை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
கோவை மற்றும் மதுரை நகர்ப் பகுதிகளில் போதிய அளவு மக்கள் தொகை இல்லை என்பதால், இந்த இரு மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையை நிராகரிப்பதாக மத்திய நகர்ப்புற விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவை பெருநகரில் மக்கள் தொகை 23 லட்சத்து 50 ஆயிரம் என்றாலும், மாநகராட்சிப் பகுதியில் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். மதுரையை பொறுத்தவரை, மாநகராட்சிப் பகுதியில் 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் என்றும், புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் 14 லட்சத்து 70 ஆயிரம் பேர் என்றும் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் 20 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை கொண்ட ஆக்ரா, பாட்னா, போபால் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரண்டாம் நிலை நகரங்களான உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் கான்பூர், மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் புனே, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், குஜராத்தின் சூரத் ஆகிய நரங்களில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
