பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், தென்மாவட்ட மக்களின் முதன்மைச் சுற்றுலாத் தலமாக நெல்லை பொருநை அருங்காட்சியகம் உருவெடுத்துள்ளது. வழக்கமாகப் பொங்கல் விடுமுறை நாட்களில் திரையரங்குகள் மற்றும் அறிவியல் மையங்களுக்குச் செல்லும் மக்கள், இந்த ஆண்டு தமிழக அரசின் பெருமுயற்சியால் திறக்கப்பட்ட பொருநை அருங்காட்சியகத்தைக் காண ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் குடும்பம் குடும்பமாக இங்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பொருநை ஆற்றங்கரையில் அமைந்த ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களின் பண்டைய நாகரிகத்தையும், வாழ்வியலையும் பறைசாற்றும் இந்தத் தொல்பொருட்களைப் பார்வையிடப் பொதுமக்களிடையே பெரும் ஆர்வம் காணப்படுகிறது. குறிப்பாக, மாட்டுப் பொங்கல் அன்று மட்டும் 11 ஆயிரத்து 686 பேர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளனர். நேற்று முன்தினம் வரை மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
அருங்காட்சியகத்தில் தொன்மை ஒருபுறம் இருக்க, நவீனத் தொழில்நுட்ப வசதிகளும் இளைஞர்களையும் குழந்தைகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ஐந்திணை’ 5டி (5D) தியேட்டர் மற்றும் 7டி (7D) படகு சிமுலேட்டர் ஆகியவற்றில் தலா 25 ரூபாய் கட்டணத்தில் புதுவிதமான அனுபவத்தைப் பெற மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து மகிழ்ந்தனர். அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நின்று பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்ததைக் காண முடிந்தது. விடுமுறை நாளான நேற்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வருகை தந்தனர்.
அருங்காட்சியகத்திற்கு இணையாக நெல்லை மாவட்ட அறிவியல் மையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 383 பேர் வருகை தந்த நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 2500-ஐ தாண்டியது. அறிவியல் மையத்தில் உள்ள விண்வெளி அரங்கு, விந்தை ஆடிகள் மற்றும் கேளிக்கை அரங்குகள் காலை 10 மணி முதலே பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தன. பல குடும்பங்கள் மதிய உணவை வீட்டிலிருந்தே கொண்டு வந்து, அங்கிருந்த பூங்காக்களில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் சிறப்பு காட்சிகளும், விண்வெளி குறித்த விளக்கங்களும் மாணவர்களை வெகுவாகக் கவர்ந்தன. பொங்கல் விடுமுறையானது நெல்லை மக்களுக்கு வரலாற்று அறிவோடும், அறிவியல் தேடலோடும் ஒரு பயனுள்ள அனுபவமாக அமைந்தது.
