“வடக்கு யாருக்கு?”: மதுரையில் திமுக – காங்கிரஸ் இடையே போஸ்டர் யுத்தம்.. கோ.தளபதி பேச்சால் பற்றி எரியும் கூட்டணி

தமிழக அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் மதுரை மண்ணில், தற்போது ஆளுங்கட்சியான திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் இடையே மூண்டுள்ள மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர திமுக மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான கோ.தளபதி அவர்கள் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், “பூத் கமிட்டிக்கு கூட ஆளில்லாத கட்சி காங்கிரஸ்” என்று விமர்சித்ததே இந்த மோதலுக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. கூட்டணிக் கட்சியை இவ்வளவு வெளிப்படையாகச் சாடியது காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோ.தளபதியின் இந்தப் பேச்சுக்குக் காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் சமூக வலைதளங்கள் வாயிலாகக் கடும் பதிலடி கொடுத்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த திமுக மேலிடம், கோ.தளபதியை நேரில் அழைத்து கண்டித்ததோடு, கூட்டணிக் குறித்து யாரும் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என்று கடிவாளம் போட்டது. இருப்பினும், களத்தில் மோதல் தணிந்தபாடில்லை. மதுரையின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் இளைஞர் அணியினர், கோ.தளபதி பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்கக் கோரி போஸ்டர்களை ஒட்டி திமுகவினரைச் சீண்டினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர் எம்.பி, “தன்மானத்துடன் போஸ்டர் ஒட்டிய இளைஞர் காங்கிரஸாரைப் பாராட்டுகிறேன். வடக்கு தொகுதியைக் காங்கிரஸ் கேட்டுப் பெறும், எங்களுக்குத் திருப்பி அடிக்கத் தெரியும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

காங்கிரஸின் இந்தச் சவாலால் அதிருப்தியடைந்த திமுகவினர், தற்போது வடக்கு தொகுதி முழுவதும் கோ.தளபதியின் படத்தைப் போட்டு ‘வாக்களிப்பீர் உதயசூரியன்’ என்று பதிலடி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். கட்சித் தலைமை இன்னும் வேட்பாளரையே அறிவிக்காத நிலையில், இப்போதே உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு போஸ்டர் ஒட்டியது கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “தலைமைப் பொறுமை காக்கச் சொன்னாலும், கீழ்மட்டத் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் தேர்தலின் போது பாதிப்பை ஏற்படுத்துமோ?” என்ற அச்சம் எழுந்துள்ளது. மதுரையில் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சியுடன் மோதல் நீடித்து வரும் நிலையில், இப்போது காங்கிரஸுடனும் ஏற்பட்டுள்ள இந்தப் ‘போஸ்டர் யுத்தம்’ திமுக கூட்டணிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Exit mobile version