புதுடில்லி : காவல் துறையின் லாக்கப்களில் நடைபெறும் வன்முறை மற்றும் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “லாக்கப் மரணங்களை நாடு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது” என சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.
போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமரா பொருத்தாததைச் சார்ந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வரும் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கடந்த எட்டு மாதங்களில் 11 பேர் லாக்கப்பில் உயிரிழந்துள்ள விவகாரத்தை எடுத்துக் கொண்டது.
இந்த மரணங்களைப் பற்றி நீதிபதிகள், “இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகக் கடும் அமைப்புச் சீர்கேடு. குடிமக்களின் உயிர் பாதுகாப்பில் காவல் துறை தோல்வியுறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என வலியுறுத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் தாக்கல் செய்யாதது குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
“இது நீதிமன்றத்தைக் குறைத்து மதிப்பதாக அல்லவா கருத வேண்டும்? இந்த வழக்கை மத்திய அரசு மிக லைட்டாக எடுத்துக் கொள்கிறதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், “லாக்கப் மரணங்களை எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த வழக்கில் நான் நேரடியாக ஆஜராகவில்லை. அதுவே நீதிமன்றத்தை லைட்டாக எடுத்துக் கொண்டதாக பொருள் கொள்ளக்கூடாது” என கூறினார்.
நீதிமன்றம், மத்திய அரசு இந்த வழக்கில் அடுத்த மூன்று வாரங்களுக்குள் விரிவான அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
















