முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தமிழகத்துடன் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்திற்குப் பிறகு 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் வழக்கம் உள்ளது. ஆனால், ஆவணி திருவிழா தொடங்க இருப்பதால், இந்த முறை 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகம் முன்கூட்டியே அறிவித்திருந்தது. அதன்படி மண்டல பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், இன்று மண்டல பூஜை நிறைவு விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, பெங்களூரை சேர்ந்த திருமலை திருப்பதி, ஸ்ரீமன் நாராயணா சபா சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் கோவிலின் அலங்கார வேலைகள் செய்யப்பட்டன. அலங்காரத்திற்கு தென்னங்குருத்து இலை, அந்தோனியம், ரோஜா, கிசாந்திமம், ப்ளூ டெசி, ஜெர்ப்புறா, ஜிப்ஸி, கரும்பு, காமினி, டேய் சுனிஸ், செக்ஸி ஹலோ கோனியோ, ஆர்கிட்ஸ், ஆரஞ்சு, அண்ணாச்சி பழம், சோளக்கருகு உள்ளிட்ட பல்வேறு மலர்கள் மற்றும் பழங்கள் பயன்படுத்தப்பட்டன.
கோவிலின் சண்முக விலாச மண்டபம், மூலவர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, பெருமாள், விநாயகர் சன்னதி, கொடிமரம், நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்தப் பணிகளில் சேலம், சென்னை, பெங்களூரு, கொங்கணாபுரம் பகுதிகளைச் சேர்ந்த 110 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி, இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மண்டல பூஜை அபிஷேக பூர்த்தி பூஜை தொடங்கி நடைபெற்றது.