சென்னை:
நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவ்வருடம் அவர்களது திருமண வாழ்கையின் 15வது ஆண்டாகும். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதனையடுத்து, நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இதேநேரத்தில், ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரபல திருமண விழாவில் ஒரே மேடையில் காணப்பட்டதையடுத்து, பலவிதமான பரபரப்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இதற்குப் பின்னர், ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்குத் தக்க பதிலாக பாடகி கெனிஷாவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரவி மோகனும் அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன்; இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன். என் காயங்களை உணராமல், என் கண்ணியத்தையே கேள்விக்குள்ளாக்கும் சூழ்நிலையில் நான் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் என் வாழ்க்கையை கட்டியெடுத்துள்ளேன். கடந்தகால திருமண வாழ்க்கையை மலிவான அனுதாபத்துக்காக பயன்படுத்துவதை நான் ஏற்க முடியாது.
இன்று நான் எடுத்த முடிவால், எனது வாழ்க்கையில் எப்போதும் இல்லாத அளவுக்கு மனமகிழ்ச்சி அடைந்துள்ளேன். என் குழந்தைகள்தான் எனது பெருமை, மகிழ்ச்சி. அவர்களுக்காக என்னாலான எல்லாவற்றையும் செய்வேன்.”
ரவி மோகனின் இந்த அறிக்கை தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையே இது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.