சென்னை: வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றின் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் வக்பு திருத்தச் சட்டத்தின் சில சர்ச்சைக்குரிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடையை விதித்துள்ளது. அவை :
- வக்பு வாரியத்தில் உறுப்பினராக இருப்பதற்கு ஒருவர் குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றியிருக்க வேண்டும் என்ற விதி.
- வக்பு நிலத்தை அரசு நிலம் எனக் கூறி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கச் செய்யும் பிரிவு.
- வக்பு பயனர் உரிமையை மாவட்ட ஆட்சியர் நீக்கும் அதிகாரம்.
- வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்டப்பிரிவு.
இந்த உத்தரவால், வக்பு வாரியங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மை நிலையைத் தக்க வைத்துக்கொள்ளும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் விளக்கியுள்ளது.
இதையடுத்து, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், “மத்திய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக வக்பு சட்டத்தில் செய்திருந்த முக்கிய திருத்தங்களுக்கு மாண்புமிகு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த தீர்ப்பு, மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் என மக்கள் நம்பும் நிலையை வலுப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், வக்பு சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தருணத்திலிருந்தே திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும், தமிழக சட்டப்பேரவையிலும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.















