அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இறுதி பட்டியல் நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் முகமது சிராஜ் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 8 நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில் போட்டிகள் டி20 ஃபார்மேட்டில் நடைபெறுகின்றன. 8 அணிகளும் ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணியைத் தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்வால் தலைமையில், கௌதம் கம்பீர் உள்ளிட்டோர் நாளை கூட்டம் நடத்த உள்ளனர்.
புதிய முகங்களுக்கு வாய்ப்பு ?
இந்த தொடருக்கான இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் நிலையில் ரிஷப் பந்த், கே எல் ராகுல் ஆகியோருக்கு இடம் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா வாய்ப்பு பெறக்கூடும். அதேபோல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சு பிரிவு
பவுலிங் பிரிவில் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறதாலும், கடைசி நேரத்தில் அவர் அணியில் சேர வாய்ப்பும் மறுக்கப்படவில்லை.
சிராஜுக்கு ஓய்வு ?
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளிலும் பந்துவீசிய முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே அவர் ஆசிய கோப்பை அணியில் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.















