கோவை: கோவை விமான நிலையம் அருகே 19 வயது கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த அந்த மாணவி, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில், தனது நண்பர் வினித்துடன் காரில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த மூவர், வினித்தை அரிவாளால் தாக்கி, மாணவியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. கடுமையாக காயமடைந்த வினித் மயக்கம் அடைந்த நிலையில் அங்கிருந்தார். மயக்கம் தெளிந்ததும், தன்னுடன் இருந்த மாணவி காணாமல் போனதை கண்ட உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். தேடுதல் பணியில் ஈடுபட்ட அவர்கள், அருகிலுள்ள பகுதியிலிருந்து மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வினித்தும் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் கைது செய்ய காவல்துறை 7 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடிவருகிறது. இந்த சம்பவம், கோவை விமான நிலையம் சுற்றுவட்டாரத்தில் மாணவிகள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
